காமம் காமமென்ப...
“இந்த கெரகத்த எங்காச்சும் மல மேல இருந்து தள்ளீட்டு, இன்சூரன்ஸ் பணத்துக்கு ஐடியா போடுறேன்..” குமரப்பன் பேச்சுல உதடுதான் அசஞ்சுது. முந்தா நாள் மதியம், நவி மும்பையில இருந்து லாரி கிளம்புறப்போ, வண்டியில ஏறி உட்கார்ந்ததும் பய பக்தியோட ஸ்டியரிங்கை தொட்டு நெத்திக்கு வெச்சு கும்பிட்டுக்கிட்டத்த நானே பார்த்தேன். “இன்சுரன்ஸ் பணத்த வாங்கிட்டு சிவனேன்னு ஊருக்குள்ளயே ஒரு பொட்டிக்கடைய வெச்சுட்டா இமுசு இல்ல.. வாப்பா போலாம்.. ஆத்துல ஒரு குளியல போட்டாத்தான் மேற்கொண்டு வண்டியோட்ட முடியும்.”
குமரப்பனுக்கு பெருத்த உடல். கசங்கிய லுங்கிக்கு மேல் அந்த அழுக்கான ஆரஞ்சு முண்டா பனியன், ஊளைச் சதையைப் பிதுக்கியது. சொட்டை முன் மண்டையில் இருந்து உச்சிக்கேறி பின் மண்டையில் மயிரை கீழே தள்ளி வருகிறது. அத்தப்பெரும் உடலுடன் லாரியின் மேல் ஏறுவதிலும் இறங்குவதிலும் அத்தனை சாதூர்யம்.
“ஹேக்..” அவர் குதித்ததும் என் வயிற்று கொழுப்புச் சதை குலுங்கியது.
“லாரியில ஏறுறது எறங்கறது எல்லாம் ஒரு கலை பாத்துக்க..”
'மூன்றாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்துக்கு முனிஸ் காந்த் லாரி ஓட்டும் காட்சிகளுக்கு எத்தனை சிரமப்பட்டார் என ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். முனிஸ் காந்த்துக்கும் குமரப்பனுக்கும் தொப்பை ஒரே அளவு தானிருக்கும். சத்தியமங்கலம் பக்கத்துல சிக்கரசம் பாளையம் குமரப்பனுக்கு. பல ஊரு தண்ணி குடிக்கிறதால கொங்கு தமிழ்ல கலப்படம் புகுந்துருது. டெங்கு வந்து பொண்டாட்டி செத்ததுல இருந்து தமிழ் நாட்ட தாண்டி லாரி ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு. கடுக்கான் தான் குமரப்பனுக்கு கிளீனர், கையாள், கெட்ட வார்த்தைகள் கொட்டப்படும் குப்பைத் தொட்டி, செல்லப் பிள்ளை எல்லாம்.
“டீச்சர் அடிக்கிறாங்கன்னு பள்ளிக்கூடத்த விட்டு வொர்க்ஷாப்ல சேந்தான். அங்கயும் ஈட்ட வாங்கி எங்கூட லாரிக்கு க்ளீனரா வந்துட்டான். இப்ப ஒரே டப்பால ரண்டு பேரா பொச்சு கழுவிட்டு இருக்கோம்.” குமரப்பனுக்கு கை நீட்டுற பழக்கம் இல்லை. அன்போ கோவமோ.. கெட்ட வார்த்தை மட்டும்தான்.
கடுக்கான் லாரி கேபினுக்குள் இருந்து சமையல் உபகரணங்களை கீழே கை மாற்றி, சிந்திய அரிசிக்கு குருவி இறங்கியதைப் போல குதித்தான். நான் இன்னும் கொஞ்ச நேரம் மேலேயே இருப்பதென முடிவு செய்தேன். ஜன்னல் வழியே எனக்கு எதிராக ஓங்கி எழுந்து நிற்கும் மரங்களைப் பார்த்து சடவு முறித்தேன். அதிகாலையில் பெய்த மழை, பனி மூட்டத்தை எங்களைச் சுற்றி அகலாமல் நிறுத்தி வைத்திருந்தது. கர்நாடகத்தின் வடமேற்கு மூலையில் ஓடும் ஹிரன்யகேசி ஆற்றுப் படுகையில் தான் வண்டியின் தற்போதைய தாமசம். அங்கேயே சமைத்து உண்டு, கொஞ்சம் ஓய்வெடுத்து, மதியம் பனிரெண்டு மணி வாக்கில் பெலகாவிக்குப் புறப்படும் உத்தேசம்.
“பீடிய பத்த வெக்கிறியா..?”
பேசிய கையேடு பீடிக் கட்டை எடுத்து வீசினார்.
“செம்ம ஸ்பாட்டு ண்ணா.. வேற லெவல்..”
“இனி என்ன? ஆக்குற சோத்த தின்னுட்டு வண்டி கெளம்புற வரைக்கும் உக்காந்து கதை எழுது..” குமரப்பன் ஒரு சிறிய இரும்புக் கம்பியில் லாரியின் டயர்களில் அடித்து காற்றை சரிபார்த்த பின் துண்டை எடுத்து ஆற்றுக்கு நடந்தார். எனக்கு என்னமோ எழுதவே தோன்றவில்லை. அந்த பனிக் காற்றில் பேனாவை விட நான் பீடியையே காதலித்தேன். வரும் வழியில் தாபா ஒன்றில் நூறு ரூபாயை கடுக்கான் ஏமார்ந்ததால், குமரப்பனுக்கு அவன் மீது கோவம். அவன் வாங்கி வந்தது கிழ்ந்த நூறு ரூபாய் தாள் என தெரிந்த பின் கடுக்கான் அதையே அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டான்.
அது ஆர்ப்பாட்டமும் அழுக்கும் இல்லாத சாதுவான ஆறு. நீர்க் காகங்கள் தண்ணீரின் நடுவே பாறையில் மேல் இறக்கைகளை விரித்து நின்று எங்களை வேடிக்கை பார்த்தது. ஹிரன்யகேசி அழகான முதல் மாத கர்ப்பிணியாக பிம்பம் பட்டாள். இவள் தான் கடபிரபாவோடு கலந்து விசாகப்பட்டினத்தில் கிருஷ்ணவாக மீன் சூரையோடு அகன்று ஓடுகிறாள். தென் மேற்கு பருவ காலங்களில் ஆந்திராவின் கடலோரங்களை இடித்துப் புரட்டுவாள். குழந்தையை ஈனும் போது கர்ப்பிணிக்கு அசாத்தியம் அதிகம் தானே!
எனக்கு தண்ணீரைக் கண்டால் முங்கி, புரண்டு, ஊறிக் கிடக்கும் குணம். தண்ணீரை விட்டு வருவதென்றால் குறைந்தது உள்ளங்கை விரல் நுனிகள் விரைத்து சுருங்கியிருக்கும். குமரப்பன் முதலில் தண்ணீருக்குள் உட்கார்ந்து (தவழ்ந்து) போய், ஆழம் பார்த்தார். கொஞ்ச தூரத்துக்கு மார்பளவு தண்ணீர்தான். லாரியின் எஞ்சின் அதிர்வில் அழுத்திருந்த தசைகளை ஆறு கலைத்தது. இந்தப் பயணத்தின் அந்த நாளுக்கான வாழ்வை நான் வாழத் தொடங்கி விட்டதாக பெருமைப் பட்டேன்.
“எப்புடி..? குளுரு எல்லாம் கால நனைக்கிறப்போ மட்டும்தான்.. ஒடம்ப நனச்சுட்டா குளுரில்ல.. தண்ணி கதகதன்னு சுகம்மா இருக்கா..?”
நான் தலையாட்டி,
“ஒரே ஒரு குறை, கஞ்சா மட்டும் இல்லை..” என்றேன்.
நான் ராஜஸ்தானிலிருந்து கிளம்பிய ஐந்தாம் நாளில் குமரப்பனின் ‘பழனி ஆண்டவர் துணை’ லாரி என் கண்ணில் பட்டது. ஈரோட்டிலிருந்து பதப்படுத்திய ஆட்டுத் தோலை நாசிக்கில் இறக்கி விட்டு, வேறொரு லோடுக்காக நவி மும்பை வரை வந்து காத்திருக்கும் சமயம். குமரப்பன் மெனக்கெட்டு லாரியை ‘யு டர்ன்’ எடுத்துக்கொண்டிருந்தார். சில நாட்களாக கேட்டிறாத என் மண்ணின் கெட்ட வார்த்தைகள் காற்றில் கேட்ட போது, நிலமெங்கும் விழாமல் நெற்றியின் மீது விழுந்த முதல் மழையின் குதுகலம். ஆக பயணத்தின் அடுத்த கட்டத்தில் பீடிக்கு பஞ்சமில்லை. நான் குமரப்பனின் வண்டி முன்னால் நின்று, வண்டியின் பெயரையும், நம்பர் பிளேட்டையும் பார்த்து, பக்கவாட்டில் போய் அவரிடம் பேசினேன்.
“இப்பத்திக்கு லோடு இல்லயே தம்பி. வெறும் வண்டியப் போட்டுட்டு நிக்கிறேன். எங்கிட்ட லிஃப்ட்டு கேக்கறிங்க?”
“நீங்க ஏத்திக்கிறன்னு சொன்னா நா வெய்ட் பண்ற ண்ணா..”
“எதுவரைக்கும்?”
“சென்னை.. கோயம்புத்தூர்.. தமிழ்நாட்டுல எங்க எறக்கி விட்டாலும் சரி..”
“கையில காசு இல்லியா?”
என் முதுகில் தொற்றியிருக்கும் ட்ராவல் பேக்கைப் பார்த்தார். நான் ‘இல்லை’யென தலையாட்டி சிரித்தேன். குமரப்பன் வழுக்கைக்கு பின்னாலிருந்த மயிரைச் சொறிய, கடுக்கான் ஓனரிடம் சைகையில் எனக்காகக சிபாரிசு செய்தான்.
“இத்தப் பெரிய பேக்க மாட்டிட்டு இருக்க.. காச தொலைச்சுட்டியா? இந்த ஊருல கண்ண சிமுட்டுறக்குள்ள பணத்த உருவிட்டு போயிருவானுக. கண்டாரோத்தாம் பசங்க.. சரி போன் நம்பர குடுத்துட்டு இங்கயே எங்காச்சும் இரு. கொஞ்ச நேரத்துல லோடு ஏத்திருவாங்க.. நா கூப்புடற..”
“இப்பத்தா லோடு இல்லின்னிங்க..”
“காலம் கெட்டுக் கெடக்குது சாமி.. யார நம்புறதுன்னு தெரிய மாட்டிங்குது.. எங்க கடுக்கானே ஒரு நாளைக்கு என் தல மேல கல்லத் தாங்கி போட்டு லாரிய லவட்டிட்டுப் போயிருவான்னு தோனுது..”
பன்வல் மெட்ரோ ஸ்டேஷன் பெஞ்சில் சாய்ந்துகொண்டு சாஃப்ட்வேர் பெண்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். கண் முன்னே அத்தனையும் கலர் ஊற்றிய ஐஸ் குச்சிகள். கண்கள் சாப்பிடும்போது உடலுக்கு பசி தாகம் எடுக்காது. நேரம் போவது தெரியாது. ஐன்ஸ்டைனின் கருத்துக்கள் என்ன! அவரே புரிபடுவார்.. லாங் பிக்ஸி, ஸ்மூத் லாப், கர்டைன் பேங்க்ஸ் என பல வித ஹேர் ஸ்டைலில் குறுக்கும் மருக்கும் நடக்கும் தேவதைகளால் நிறைந்த அந்த இடம் ஒரு உற்சவச் சுற்றுலா. கடைசியாக ஸ்பைக் பிக்ஸியில் தலையைக் கோதி நின்றாள் ஒருத்தி மூன்று பெண்களுக்கு நடுவில். உத்தம வில்லன் படத்தில் பார்வதி திருவோது இந்த ஹேர் ஸ்டைலில் தானிருப்பாள். அவளின் வெள்ளைச் சட்டை, அதில் மங்க(ள)ல பிம்பமிட்ட அவள் வளைவு, ப்ளாட்டினமோ, வைரமோ ஒரு புள்ளி மின்னும் கம்மல், காதின் பின்னால் கழுத்துக்கு வழியும் வியர்வை, நேர்த்தியான சதுரக் கண்ணாடி என கவனித்த அத்தனையும் எச்சிலை விழுங்கச் செய்தது. அவளின் ஒற்றைப் பார்வைக்காகவும், அவள் ரயில் உடனே வந்து விடக் கூடாதெனவும் கடவுளைக் கும்பிட்டேன். சில சமயம், கடவுள் இருக்கிறார் என கட்டாயப் படுத்திவிடுகிறது மனம், என உணரும் தருணத்தில் போன் அடித்தது.
“தம்பி ரயில் ஏதாச்சும் ஏறிட்டியா இல்ல இங்கதா இருக்கியா? அஜ்ரா வரைக்கும் ஒரு லோடு கெடைச்சுருக்கு.. டக்குனு கெளம்பி வா..”
குமரப்பன் நிச்சயமாக கூப்பிடுவார் எனத் தெரியும். அதுவும் இப்படியொரு சந்தர்பத்திலா? எனக்கோ க்யுபிட்-டின் அம்பு நெஞ்சில் குத்தியிருக்கும் இக்கட்டு. அவளை வழியனுப்பிய பின்தான் என் பயணம் என முடிவு செய்தேன். பித்துப் பிடிக்க வைக்கும் வெண் பிக்ஸி-க்காக வேறொரு லாரியைப் பார்த்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டுக்கு லாரி கிடைக்கவில்லை எனில் கொல்கத்தா மார்க்கம் போலாம்.
‘இந்த கணம் இக் கேளீருடன் கொண்டாடப்பட வேண்டியது. கொண்டாடித் தீர்ப்போமடா பூங்குன்றா..’
அடித்த சில சிமிடங்களில் ரயில் வந்து நிற்க, ‘லேடீஸ் ஒன்லி’ கோச்சில் ஏறினாள். கடவுள் இல்லை. இனிமேல் இருப்பதாக கட்டாயப் படுத்த நேர்ந்தால் அவர் எனக்கு ‘லேடீஸ் ஒன்லி’ பெட்டியில் இன்விசிபில் மனிதனாகும் மந்திர சக்திகளைத் தர வேண்டும்.
அஹமத் நகரிலிருந்து கர்நாடக பார்டரில் உள்ள திம்பூர்னி வரைக்கும் திருட்டு பயம் அதிகம். ஒத்தையில் போகும் சரக்கு லாரியை நோட்டமிட்டு சுற்றி வளைக்கும் கொள்ளைக் கும்பல், கிடைப்பதை அத்தனையும் சுருட்டிக் கொள்ளும். குமரப்பனின் நிற்கதிக்கு அநேகமாக கடுக்கானுடன் சேர்ந்து நானும் ஒரு போலி அடியாள் ஆவேன் என்கிற நம்பிக்கை.
கோவா எல்லையில் கர்கோட்டியில் இருக்கும் ஒரு அட்டை ஃபேக்டரிக்கு வண்டி கிளம்பியது. அந்தப் பாதையில் திருட்டு பயம் அதிகமில்லை எனினும் குமரப்பன் என்னைக் கூப்பிட்டிருக்கிறார். ஒரு வேலை அங்கே இறக்கிவிட்டு கோவாவுக்கு போவென கையைக் காட்டிவிடுவார் என நினைத்தேன். லாரியில் ஏறிகொண்ட பின் கடுக்கானைப் போல நானும் அவருக்கு வளர்ப்புப் பிள்ளை ஆகிப் போனேன்.
“சொந்த லாரிய வாடகைக்கு ஓட்டறது நாய் படாத பாடு.. நிமுந்தா நெஞ்சுல மிதிப்பானுக.. குனிஞ்சா குண்டியில மிதிப்பானுக..”
“ரொம்ப சிரமம்..?”
“சிரமமா? நீ ஒன்னு.. டீசல் ரேட்டு நிமிசத்துக்கு ஒருக்கா ஏறுது. அதுக்கு வாட் டேக்ஸ் பூட் டேக்ஸ்னு.. டோல் கேட்டுல காச கட்டியே சம்பாரிக்கிறதெல்லாம் கரியா போவுது. பத்தா கொறைக்கு இப்ப தேர்டு பார்டி இன்சூரன்ஸ ஏத்திட்டானுவ.. சோத்தோட கடிச்ச கல்ல மெல்லறக்கும் இல்ல துப்புறக்குமில்ல..”
புறப்பட்டதில் இருந்தே நல்ல மழை. மழை கொட்டப் போகிறது என்று மும்பையில் வெயில் சூட்டைக் கிழப்பும் போதே தெரிந்தது. மகாபல்லேஷ்வர் வரைக்கும் நீட்சியாக இருந்த மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பச்சைகளை இரவு விழுங்கி மென்றுகொண்டிருந்தது. மழைக் காற்றில் அங்கங்கே மிளகாய் தோட்டங்களின் நெடியும், ஈர மண் வாசனையோடு செண்டு மல்லியின் மணமும் தொடர்ந்து வந்தது. என்ஜின் சூட்டில் குளிர் இதமாக இருந்தது. இரண்டு பீடிகளை நான் கேட்டே கொடுத்த குமரப்பன், ஒரு கட்டத்தில் மொத்த பீடிக் கட்டையையும் என்னிடம் வீசி விட்டார்.
“நாங்கூட உடுப்பப் பாத்து சிகரெட்டு மட்டும்தான்னு நெனச்சுட்டேன்.”
“எனக்கு சிகரெட்டும் ஒத்துக்கும் பீடியும் ஒத்துக்கும்..”
“அடி சக்க..”
“இந்த ரூட்டுல திருட்டு பயம் இல்ல? அதெல்லாம் திம்பூர்னி ரூட்டுலதான்.. ஏண்ணா..?”
“அப்படீன்னு சொல்ல முடியாது.. அடிக்கும் தலைக்கும் பாரு.. எங்கயுமே ஒத்த வண்டி தனியாப் போகாது..”
“நீங்க எப்பாச்சும் பாத்துருக்கிங்களா?”
“அந்த பண்ணாரி மாரியாத்தா புண்ணியத்துல நான் இன்னோ எவன் கைக்கும் சிக்கல. போறவிய வரவிய சொல்லுவாங்கல்ல? படுதா போத்தியிருக்குற தினுச வெச்சே அது என்ன லோடுன்னு கண்டுக்குவாங்க. இரும்பு சாமனமா இருந்தா வண்டி இழுக்காது. மெல்லத்தான் போயாகணும். தனி வண்டியா போனா டக்குனு ஜீப்ப குறுக்க போட்டு மடக்கிருவானுக. பத்து நிமிசந்தான் டைமு.. லோடு வண்டியா இருந்தா கீழ குத்திச்சு ஓடிறணும். ஓடிட்டா ஆயிசு கெட்டி. காலி வண்டின்னா கை காச தந்துரணும். இல்லீன்னா அடிக்கிறது எனத்த? காட்டுக்குள்ள இழுத்துட்டு போயி பெட்ரோலு ஊத்தி எரிச்சுருவானுக தாயோலிக..”
“ஹைவே பேட்ரல் இருப்பானுகள்ள?”
“அவனுகளுக்கு இவனுகளே பரவால்ல.. லோன்வாலா மெய்ன் ரோட்டுல வராம எதுக்கு இந்த காட்டுக்குள்ள வரன்னு நெனைக்கிற? போலீசுக்கு பயந்துட்டுத் தான்..”
குண்டும் குழியுமான ரோடும், எரிந்தும் துருப்பிடித்து நின்ற லாரி கண்ணில் பட்டதும் நான் அது வரைக்கும் கேட்ட கொலை கொள்ளைக் கதைகளுக்கு கொடிய உருவகம் தந்தது. மறைந்திருக்கும் ஓநாய் கூட்டத்தினுள் தலை நிமிராது ஓடும் செம்மறி ஆடாய் எங்கள் லாரி அதின் எல்லையை மெல்ல மெல்லக் கடந்தது. கடுக்கான் பொடியன். நான்கு முறை கூட அவன் வயதுக்கு மீசையை மழுங்கியிருக்க மாட்டான். நவி மும்பை டவுனைத் தாண்டியதும் தூங்க ஆரம்பித்தவன். குமரப்பனுக்கு பேயறைந்த முகம். எனக்கு கொட்டாவி வந்தாலே நாட்டு நடப்பைப் பேச ஆரம்பிப்பார். என் பயணத்தைக் கிண்டலடிப்பார். சில்க் ஸ்மிதாவில் இருந்து சினேகா வரை ஒரு ரவுண்டு வருவார். அந்த இரண்டு நாள் பயணத்தில் கடுக்கன் விழித்திருக்கும்போது மட்டுமே நான் தூங்கினேன்.
இரவு இரண்டறைக்கு வண்டி ஃபேக்டரி-க்குள் நுழைய, சூரிய உதயத்தின் போது ஃபேக்டரி ஆட்கள் லாரியிலிருந்து அட்டைகளை இறக்கி விட்டார்கள். காலை உணவுக்குப் பின் மீண்டும் பயணம். அந்த நாள் இரவு எட்டு மணிக்கு பெலகாவியில் வண்டியை நிறுத்தினால், தமிழ்நாட்டுக்கு லோடு அடிக்க ஏதேனும் சரக்கு கிட்டும் வாய்ப்பு இருக்கிறது. உறுதியாக பெங்களூருக்கு கிடைக்கும். குமரப்பன் வண்டியை விரட்டினார். இரண்டு நாட்களாக நான் பார்த்த குமரப்பன் இல்லை அது. கர்கொட்டியில் இருந்து அஜ்ராவுக்கு இறங்கும்போது லாரியின் சக்கரங்களில் பாராக்ளைடர்கள் முளைத்திருந்தன. அங்கிருந்து கிளம்பிய ஒன்றரை மணி நேரத்தில் நாங்கள் ஆற்றில் இறங்கியிருந்தோம்.
கடுக்கன் கூட்டாஞ்சோறும் உருளைக் கிழங்கு பொறியலும் வைத்தான். ஒரு பருக்கை மிச்சமாகாது காலி செய்து பாத்திரங்களை ஆற்றில் கழுவி பருக்கைகளை உண்ண வந்த மீன்களை ஏமாற்றினோம். நான் வண்டிக்குள் தூங்க, கடுக்கனும் குமரப்பனும் லாரிக்கு அடியில் படுதா விரித்துப் படுத்துவிட்டார்கள். மனசெல்லாம் பிக்ஸியும், அவளின் அலட்டிக்காத பிங்க் லிப்ஸ்டிக் உதடுகளும் மட்டுமே இருந்தன. நன்றாக தூங்கியிருக்க மூன்று மணி வாக்கில் மழை பெய்தது. குமரப்பன் வண்டிக்குள் வந்ததும் நிற்க வேண்டாம், மழையில் தூக்கம் வராது என வண்டியைக் கிளப்பினார்.
நாங்கள் இருவருமே விழித்துக்கொண்டுதான் மழையைப் பார்த்து வருகிறோம் ஆனால் கௌரி குமரப்பனின் கண்களுக்கு மட்டும் எப்படித் தெரிந்தாள் எனத் தெரியவில்லை. அழுத்தமாக பிரேக் போட்டு ஓரமாக நிறுத்தியபின் தான் இன்டிகேடர் எரியும் சத்தம் கேட்டது. எங்கள் ஜன்னலருகே கௌரி தொப்பறையாக நனைந்து ஓடி வந்தாள். மராத்தியிலும் கன்னடத்திலும் இருவரும் பேசிக்கொண்டார்கள். குமரப்பன் சரி என்று கெளரியை ஏற்றிக்கொண்டார். அழுத்தமாக ப்ரேக் போட்டதினால் எனக்கு முன்னமே அவர் கௌரியை ஏற்றிக் கொள்வார் எனத் தெரியும்.
கௌரிக்கு முப்பந்தைந்து வயது இருக்கலாம். முன்பு தட்டையாக இருந்திருக்க வேண்டிய உடல், இப்போது கொஞ்சம் பூசியிருக்கிறாள். பொருந்தாத சிவந்த உதடுகளும், பார்வையும், பார்த்தவுடன் விபச்சாரி என நினைக்க வைக்கும். ஆனால் சோர்ந்திருந்தாள். வெயிலில் காய்ந்து, வெளுத்து, மழையில் நனைந்திருக்கும் கற்றாழை. சிரமப்பட்டு லாரியில் ஏறி ஜன்னல் சீட் பலகையில் உட்கார்ந்து மூச்சிறைத்தாள். குறுக்கே இருக்கும் கம்பியில் ஒரு கணம் தலை சாய்த்தாள். உடல் நனைந்ததில் அவள் மார்பும் பிட்டங்களும் அப்பட்டமாக தெரிந்து குமரப்பனின் கண்களுக்கு விருந்தளித்தது. குமரப்பன் துண்டை எடுத்துப் போட்டார். கௌரி தண்ணீர் சொட்டும் கூந்தலை அவிழ்த்து துண்டில் துடைத்தாள். என் ட்ராவல் பேக்கில் பக்கவாட்டில் பொதிந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து கடித்தாள்.
“பாவம் பசியோட இருக்குறா.. வேற ஏதாச்சும் திங்கிற பண்டம் உள்ள இருக்குதா..?”
நான் இல்லையென வருத்தமாக தலையாட்டினேன்.
இருவரும் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் குமரப்பன் ஓங்கி சிரித்தார்.. எனக்கும் கடுக்கனுக்கும் எதுவும் புரியவில்லை.
“என்ன ண்ணா.. இப்டி சிரிக்கிறிங்க..?”
“நானு இவள ரோட்டுல நிறுத்தி ஏத்திக்கிட்டன்ல.. அதுக்கு இப்டியெல்லாம் நிறுத்தி ஏத்தாத. திருட்டு நடக்குற எடம்னு சொல்லுறா. பாவம் நெஜமாலுமே கௌரி அப்பாவிதான்..” அவள் முந்தானையை கழட்டி வெளியே நீட்டிப் பிழிந்தாள். உதறி பின் மீண்டும் தோள்மேல் போட்டாள். அவளுக்கு நாங்களோ முந்தானையா ஒரு பொருட்டே இல்லை. கூச்சம் நாச்சமெல்லாம் தொலைஞ்சு வருஷக் கணக்கு இருக்கும். உள்ளங்கையில தம்பாக்கு கொட்டி பொடிக் குச்சிகளைப் பொறுக்கி எறிந்தாள்.
கௌரிக்கும் நெடுஞ்சாலை குற்றங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப் பட்டது. கண்கள் ஒருவரை இமைக்கும் நேரத்தில் தவறாக எடை போட்டு விடுகிறது. நவி மும்பையில் குமரப்பன் என்னிடம் லோடு இல்லை என புழுகியதற்கு காரணம் பார்வையின் கோணம் தான். கொள்ளையடித்து வாழத் தெரிந்திருந்தால் அடை மழையில் தொப்பரையாய் நின்று குமரப்பனிடம் சிலாய்வாடி வரை லிஃப்ட் கேட்டு கெஞ்சியிருக்க மாட்டாள். கெஞ்சுவதற்கு எதிர்வினை உரிமை, உடமைகளை அதட்டிப் பறிப்பது.
“பேசாம்ம கௌரியவே லேடி கிளீனரா வெச்சுக்கலாம்? எப்படியும் இந்த ரூட்டெல்லாம் அத்துப்படியா இருந்துருக்கும்.”
“அதுவும் சவுரியம்தான்..”
“கௌரி.. தும் தமில்நாட் யஷீலா கா..? மி மஜ்ஹா கிளினர் சகான கர் சக்தா நகி”
கௌரி குதப்பிய கபத்தை துப்ப என்னிடம் சாய்ந்து வந்தாள். “மலா? கிட்டி பைசே தேஷிலெ?” அவளுடைய வெள்ளந்தி சிரிப்பு என் கேள்விக்கு பதிலாகத்தான் இருக்கும். குமரப்பனின் மராத்தி என்னை பொறாமை கொள்ளச் செய்தது.
லாரிப் பயணங்கள் பல கதைகளை சொல்லும். கதை மாந்தர்கள் வறண்ட, விடாய்த்த, இருள் பிரவேசிகள் பெரும்பாலும். கிண்டல் பேச்சுகளில் காமம் கலந்து சொல்லப்படும் அக்கதைகளில் கண்ணீர் வடிந்து காற்றெங்கும் உப்பின் நெடி பரவும். காசையே நினைத்து ஓடும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நிகழ் காலம் என்பது இரவும் ஓய்வும் மட்டுமே. புழுதிப் பட்டாம்பூச்சி அவர்கள் நிறம். கௌரியும் கூட அத்தகைய கதையின் ஒரு உதிரியைச் சொல்ல மனச் சமிக்கை செய்கிறாள். சுழற்றும் ஆற்றில் விழுந்த எறும்பொன்று இலை பிடித்து வந்து வழிப்போக்கனிடம் மூச்சிரைக்கிறது. நான் அவளிடமிருந்து ஏதேனும் ஒரு கதைக்காக காத்திருந்தேன். மராத்தியோ கன்னடமோ தெரியாததை நினைத்து வருத்தப்பட்டேன்.
எனக்கு லாரிப் பயணங்கள் பிடிக்க இன்னொரு பிரத்யேக காரணம் உண்டு. மலைப் பாதைகளில் வளைந்து போகும்போது, ஆற்றுப் பாலங்களை கடக்கும்போது, கருமேகம் மூண்ட சாலை, தூரல், பேய் மழை, வெயில் ஒழுகும் சமவெளி நெடுஞ்சாலை, பழைய பாடலோ, புதுப் பாடலோ, சப்தமோ, அமைதியோ என எந்தக் காரணத்துக்கும் தேர் கணக்காய் ஊர்ந்து போகிற லாரியில் பீடியைப் பற்ற வைக்கலாம். அதன் சவுகர்யம் அலாதி இன்பம். மெனக்கெட்டு புகையை வெளியே தான் ஊத வேண்டும் என்றில்லை. அதிலும் தமிழ் நாட்டு லாரி என்றால் ஏக சுதந்திரம். உரிமை தலைக்கேறிவிடும். கியர் பாக்ஸின் மீது காலை நீட்டி வைத்து உட்கார்ந்து பீடி குடிக்கலாம்.
“காரணம் என்ன பெருசா? இஷ்டத்துக்கு ஸ்மோக் பண்ணலாம்.. வேற எந்த வண்டியிலயும் அதுக்கு சான்ஸ் கம்மி..”
குமரப்பன் சாலையை விட்டு என்னைப் பார்த்தார்.
என் காரணத்தை மராத்தியில் கெளரிக்கு மொழி பெயர்த்தார். நான் காசு இல்லாமல் இந்தியா முழுக்க சுற்றுவதை கிண்டலடித்தார். அவள் சிரித்து தலையில் அடித்துக்கொண்டாள். இப்போதெல்லாம் சமூகத்தின் பிடியில் இறுக்கப் பட்டவர்கள் சுதந்திரமானவர்களை பைத்தியம் போலவே பார்க்கிறார்கள்.
நான் மனிதத்தை நம்பி பாஷை தெரியாத ஊர்களில் தெருவெங்கும் நடக்கும் போது மனிதர்களே எதிர் படுகிறார்கள். அன்போடு பேசுகிறார்கள். அவர்களின் கெட்ட வார்த்தைகள் கூட சிரித்துப் பேசி கையைக் குலுக்கும். தங்குவதற்கு கொட்டகைகளை சுத்தம் செய்கிறார்கள். ரொட்டியும் பாலையும் தருகிறார்கள். குளிருக்கு நெருப்பு போட்டு பாடல்கள் பாடுகிறார்கள். அவர்கள் குழந்தைகளுடனும் நாய் குட்டிகளுடனும் விளையாடுகிறேன். அவர்கள் கிணறுகளிலும் குட்டைகளிலும் குதிக்க விடுகிறார்கள்.. என் செட்டைகளை விரிக்கத் தயாராகும் போது தூயப் பெரும் அன்பில் பரிசுகள் பொதிகிறார்கள்.. ரோடு வரை கூடே நடந்து வந்து ‘ஜனங்கள நம்பாத.. பத்திரமாக ஊர் போய் சேர்’ என வழியனுப்பி கை அசைக்கிறார்கள். ஒட்டு மொத்த மனிதத்தின் சுயநலம் ஒரு குதர்க்கம் என பைத்தியம் போல தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றும்.
வண்டி பெங்களூர் நெடுஞ்சாலையிலிருந்து டெல்வாடி போகும் சர்விஸ் ரோட்டில் இறங்கியது. குழியில் விட்டு ஏற்றியதில் ‘வந்துட்டமா?’ன்னு கடுக்கன் கோட்டுவாயை தொடைச்சு எழுந்தான். மைல் கல்லில் எதோ ஊர் பெயர் எழுதப்பட்டு அதன் கீழ் ‘3’ என்றிருந்தது. அவளுடைய ஊராகத்தான் இருக்கும். கௌரியிடம் இதுவரை கதைகள் இல்லை என்பதில் எனக்கு ஏமாற்றம். வரிசையாக இருந்த டீ கடைகளின் எதிரே வண்டி ஓரங்கட்டி நின்றது. நான் சடவு முறித்து, குதித்து சிறுநீர் கழிக்க ஒதுங்கினேன்.
“அவுரு எங்கடா? மனுஷன் அதுக்குள்ள மாயம் ஆகிட்டாரு..”
“அவுரு கௌரிகூட சூட்ட தணிக்க போயிருக்காரு ண்ணா”ன்னு ஒரு சிறுமி திண்ணையில் உட்கார்ந்திருக்கும் டீ கடையக் காட்டினான்.
“டீ கடையா?”
“செட்டப்பு இதெல்லாம். பகல் டைமுல வந்திருந்தா இந்த லைன் முழுக்கா துணி கடையும் டீ கடையுமா தெரியும்.. இந்த நேரத்துக்கு வந்தா வெறும் குண்டு பல்பு மட்டும்தான் எரியும்.”
“இதான் ரெட் லைட் ஏரியாவா?”
“இங்கெல்லாம் மஞ்ச லைட்டு தான்.”
கடுக்கான் எனக்கு பீடி நீட்டினான். அவன் பேச்சிலும் உடல் மொழியிலும் காமம் வெளிப்பட்டது. “நீங்களும் ஒரு கை பாக்கறீங்களா?” என்றான். நான் ‘அதெல்லாம் பழக்கமில்லை’ங்கிற அர்த்தத்தில் தலையாட்டினேன். என் மனசாட்சியின் முகம் கிணற்றில் மிதக்கும் பிணமாக உப்பியது.
.............
செவ்வந்தி என் மனசாட்சி சாகிற வரை, மனதோடு வாழ்வாள். இப்போதும் கூட கௌரியில் எனக்கு செவ்வந்திதான் தெரிந்தாள். விபச்சாரின்னு தள்ளி வைச்சே பார்த்த பெண்களில் முதல் முறையாக நான் காதல் வயப்பட்டது அவளிடம்தான். புது கார் வாங்கிய பார்ட்டிக்காக கார்த்தி அவளை என் அறைக்கு கூட்டி வந்த போது எங்கள் கண்ணாடிக் குவளைகளில் ஸ்டைலாக விஸ்கி ஊற்றினாள். அப்போதுதான் பழக்கம்.
சென்னையில் படிக்கும்போது அன்று, புது காருக்கு எப்படியும் ‘ஜேக் டேனியல்’ வந்திருக்குமென ஹெட்போனில் பாடிய பாடலுக்கு விசிலடித்துக் கொண்டே காலிங் பெல் அழுத்தினேன். “டேய் டைரக்டரு..” வாசலிலேயே கார்த்தி கட்டிப் பிடித்துக் குழைந்தான். சட்டென குனிந்து ஒரு பெண்ணின் செருப்பை உள்ளெடுத்துப் போட்டு கதவைச் சாத்தினான். பேச்சுலர்களின் தாபரத்தில் ஒரு பெண் இருக்கிறாள் என புத்திக்குள் மல்லிகை வாசம் வியாபித்தது. நினைத்தது நூற்றுக்கு நூறு சரி. மல்லிகை வாசமும் சரியே. உள்ளே தரையில் விரித்திருந்த மெத்தையின் ஓரத்தில் செவ்வந்தி மும்பரமாக செல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள். வயது முப்பத்து இருக்கும். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் சிம்ரனைப் பார்த்து பிரகாஷ்ராஜ், ‘அடே.. இந்திரா சாருக்கு இவ்வளவு வடிவான வைஃப் என்டு எனக்கு தெரியாது’ என்பார். அந்த ‘வடிவு’ உருவக இலக்கணம் அப்படியே செவ்வந்திக்குப் பொருந்தும்.
எனக்கு காமத்தைப் பற்றி பேசுவதில் துளியும் கூச்சமில்லை. முகம் சுழியாது. பொதுவில் அது நிச்சயம் பேசப்பட வேண்டிய விஷயம். சபை பிரசங்க சமாச்சாரம். எதிர்வினையும், பரஸ்பர காதலும் இல்லாத கூடல் அழகில்லாதது என்பதில் அதீத நம்பிக்கை கொண்டவன் நான். கண்கள் பார்த்துக்கொள்ளாத, கூந்தலின் மிருதுவில் சுகந்த வர்க்கம் முகராத, வெட்கி நிற்கும் அவளின் அப்பட்டம் ரசிக்காத, சத்தமும், சத்தமில்லாத முத்தங்களும் தீண்டாத காமம் செத்த பாம்படிப்பது. மாய்மாலச் சுவாரஸ்யம். உடலை விற்பவர்களுக்கு காமத்தின் ஆத்மார்த்தம் இருக்காது என்றொரு அபிப்பிராயம். ஆனால் ‘வடிவு’ அலைகழிக்கிறாள். அவளுடைய ‘பிங்க் பாலிஷ்’ கூர்நகங்கள் என் அந்தரங்க அலமாரியில் இருக்கும் கொள்கை கோட்பாடுகளை பிரண்டி எறிகிறது. என் அறையில், நான் தூங்கும் மெத்தையில், நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் காலை நீட்டி உட்கார்ந்திருக்கும் தினுசு, என் காமப் பெரும் பிரபஞ்சத்தில் ஹோலி கொண்டாடுகிறது.
“உங்க பேரு என்ன?”
செவ்வந்தி பதில் சொல்லாது தலை உயர்த்தி என் கண்களைப் பார்த்தாள். இந்த இரவை விழுங்கத் துடிக்கும் அந்தப் பார்வையில் என்னுள் இருக்கும் ‘ஹிப்பி-காமன்’ சாம்பல் தூண் போல் உதிர்ந்து பொடியானான்.
“சாப்டிங்களா?”
“முடிச்சுட்டுத் தான?”
‘வாட் த பஃக்..’ என் மனதுக்குள் இன்னொரு மனம் ஊளையிட்டுக் கிண்டலடித்தது. ஆறடி உயரத்தில் மூளையில் மீசையை முறுக்கி நிற்கும் மனம் செவ்வந்தியிடம் பேச்செல்லாம் காமம் கேட்பதில் வெட்கப்பட்டது.
“எங்கள எல்லாம் பாத்தா கல் நெஞ்சனுக மாதிரி தெரியுதா?”
பக்குவமாக அனுசரித்தேன். ஜேக் டேனியேலை நடுவில் வைத்து சமபந்திக்கு கூப்பிட்டேன். இப்போதைக்கு விருப்பமில்லை. செவ்வந்தியின் செவி-வழிப் பரவசமே போதும். குடித்துவிட்டு போதையில் மனம் என்ன சொல்கிறதோ அதற்கு தலையாட்டலாம் என நினைத்தேன்.
செவ்வந்திக்குப் பூர்வீகம் பழனி. குமரப்பனின் ‘பழனி மலை ஆண்டவர் துணை’யைப் பார்த்ததும் எப்படி அவள் நினைவு நெஞ்சில் காற்றாடி சுற்றாமலிருக்கும்? “இந்த தொழிலுக்கு வந்து நாலு வருஷம் போன ஆகஸ்டோட.. இந்த சரக்கு சத்தியமா..” “ஜேக் டேனியேல் ரொம்ப சூப்பரா இருக்கு.. உள்ள போறதே தெரியல..” “புதுக் காரெல்லாம் வாங்கிருக்க.. கொஞ்சம் பாத்துப் பண்ணுங்கப்பா..” அடிக்கடி வலக் கண்ணைச் சிமிட்டிப் பேசுவது அவளிடம் கவனிக்க வைக்கும் பழக்கம். “நான் காசு பணத்த பாத்துப் பண்ணுங்கன்னு சொன்ன..” பேச்சுவாக்கில் என் தொடைமீது கை போட்டு ஹார்மோன்களின் மொத்தக் குடுமியையும் இறுக்கித் தூக்கினாள். அந்த தீண்டலின் மாயத் தூவலில் மூளையும், முறுக்கிய மீசையும் மழுங்கியது. காமத்தின் தெய்வீக சாதூர்யம், மிரண்ட வெள்ளைக் குதிரையை காடெங்கும் விரட்டுகிறது. ஜேக் டேனியேல் கட்டிங்கில் செவ்வந்தி மன்மதனின் கரும்பைப் பிழிந்தாள்.
“எந்த பொறம்போக்கு நாய் அது? உம் முதுகுல பூரான் விட்டுருக்கான்..? அவ்ளோ பெரிய காயம்.. ப்ளடி நிப்பா..” என்று கேட்டு வியர்வையத் துடைத்து அமல் என்னிடம் சிகரெட் வாங்கினான். எனக்குள் அத்தனையும் இருளாகி வெள்ளை ஆனது. காமம் ஒதுங்கியது. நான் செவ்வந்தியைப் பார்த்தேன். அதுவரை அவள் பேசிய இரட்டை அர்த்த வாக்கியங்களுக்கு குறும்பாக சிரித்த முகம் இறுக்கமானது.
“அவன் ஒரு எச்ச பாடு..”
செவ்வந்தி அடுத்து பேச்சுகளில் அதீத மெனக்கெடலோடு பேசினாள். சுவாரஸ்யம் இல்லை. அமல் அவளுடைய கசப்பான அந்தரங்கத்தை நியாபகப் படுத்திவிட்டான். தலையணையை அடிமடியில் அழுத்தி செல் போன் நோண்ட தொடங்கிவிட்டாள். அடிக்கடி தலையணையை எடுத்து வைத்துக்கொண்டாள். அவள் கணவனின் விபத்து, இரு குழந்தைகளின் படிப்பு, பண கஷ்டம் என அடுக்கிய புலம்பலுக்கு அமல் என்னை தனியாகக் கூப்பிட்டான். ‘நைஸா பேசி காசு புடுங்க பாக்குறா.. உஷாரா இரு..’ இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து தூங்கப் போய்விட்டான். செவந்தி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தாள். விரல் மட்டும் போனில் தேய்ந்து கொண்டிருந்தது. என் எச்சைச் சுயநலம் அவள் வலிகளை கதையாக்குவதிலேயே இருந்தது.
“பிரான்சிஸ்..”
போதைதான் ஆனாலும் எனக்குத் தூக்கமில்லை.
“எனக்கொரு ஹெல்ப் பண்றியா? வீட்டுல டிராப் பண்றியா? படுத்துட்டா காலையில நேரமாயிரும்.” ‘வடிவு’ செத்த பாம்பாக உதவி கேட்டாள்.
செவ்வந்தி மட்டும் அந்த இரவில் இல்லையென்றால், புது ‘டஸ்டரில்’ பாண்டிச்சேரிக்கு நைட் ட்ரைவ் போயிருப்போம். சாலையோரத்தில், கடற்கரையில், சவுக்குத் தோப்பினுள் நிறுத்தச்சொல்லி ‘ஜாயிண்ட்’டைக் கொழுத்தி, ஹாட் பாக்ஸ் போட்டிருப்போம். மறுநாள் பாண்டிச்சேரியின் தெருக்களில் அரைக்கண் திறந்த போதையில் சுற்றியிருப்போம். ஆரோவில்லில் பியர் பாட்டிலோடு ஏதாவதொரு பிரெஞ்சுக்காரனின் லைவ் கான்சர்ட் கேட்டிருப்போம். இப்போது டஸ்டரில் என்னோடு செவ்வந்தி.. ஜன்னலைத் திறந்து குளிர்ந்த காற்றை முகத்தில் வாங்கி..
“ரொம்ப குடிச்சு ஒடம்ப கெடுத்துக்காத. பசங்க எல்லாரும் ரொம்ப நல்ல பசங்களா இருக்கீங்க.”
'அக்கைறை எம்மேல மட்டும் இருந்திருக்க கூடாதா?' ஒரு மெல்லிய பொசஸிவ் என்னை வெட்கப் படுத்தியது. இந்த மனசு தான் எத்தனை வஞ்சகமானது. சில விஷயங்கள் வராது, கிடைக்காது, அபகரித்தல் கூடாது என தெரிந்த பின்னும் அதன் பின் செல்ல இந்த மனதுக்கு எப்படி தைரியம் வருகிறது..? ஒரு நொடிக்குள் எப்படி பெரும் விழா எடுத்துக் கொண்டாடுகிறது..? அமைதியான சுவருக்குப்பின் எப்படி பெருங்கடலின் அலைகளைக் குடிக்கிறது..? காமத்தின் பின் வரும் காதலுக்கு மனத்தைக் கொடுப்பது கொடையல்ல. தற்கொலை. ரத்த வீச்சம் எடுக்கும் அக்கொலைகளின் மீது காமம் ரோஜாவும் வீசும்.
“ஏதாச்சும் பாட்டு கேக்கலாமா..? என்ன பாட்டு வேணும்?” நான் கேட்டேன்.
“ஏ?”
“பாட்டு கேட்டுட்டே போலாம்..”
“அதான பாத்த.. நாங்கூட, அங்க பேசாம கெடந்த மைக்கு காருக்குள்ள எந்திரிச்சுருச்சு போல.. அதனால தான் என்ன பாடச் சொல்லுவியோன்னு நெனச்ச..”
செவ்வந்தியின் ஒட்டு மொத்த கிளர்ச்சிப் பேச்சுகளும் அடிக்கடி ராஜ்குமார் ஹிரானியையே நியாபகப் படுத்தியது. அவருடைய ‘பி.கே’ படத்தில் அம்மணக் குண்டியோடு பூமிக்கு இறங்கும் ஒரு ஏலியன், உலகத்துக்கான பாஷையை ஒரு விலை மாதரிடமிருந்து ட்ரான்ஸ்மிட் செய்துகொள்ளும். எத்தனை சாமர்த்தியம்? உலகையே தன் மத்தம் கட்டிப்போட்டிருக்கும் மதங்களை தவிடு பொடியாக்க அந்த இயக்குநர் இரவின் மகள் மொழியை கையாண்டது அழகு.
“பாட்டெல்லா வேண்டாம். தல வலிக்கிது ப்பா..” ஒரு நான்கு நொடிகள் காற்று மட்டும் கேட்கும் மௌனம். “நீ வேண்ணா ஏதாச்சும் பேசிட்டே வா..”
“இதான் கஷ்டமே.. நீ சும்மா இருந்தாவே நா ஏதாச்சும் பேசுவ. இப்ப ஏதாச்சும் பேசுன்னு சொல்லிட்ட.. ஸ்டக் ஆகுது.”
“நீ அதுக்குத்தான் லாயக்கு இல்லைன்னு நெனச்ச. எதுக்குமே லாயக்கு இல்ல..”
“இப்ப எல்லாம் மல்லிப்பூ வெக்கிறது இல்லியா? சென்ட் மட்டும் தானா..?”
“ம்ம்ம்ம்.. ஓஹோ.. அட்ரா சக்க.. உனக்கு வேணும்னா சொல்லு. ஒரு நாள் வச்சுக்கிட்டு வர..”
“அப்பவும் நா லாயக்கு ஆகலன்னா..?”
“நீ அப்டியே நடிக்காத. சரக்கு அடிக்கிறப்போ என்ன எப்புடி பாத்தன்னு எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா? என்னமோ சொன்னியே...”
“என்ன சொன்ன?”
“சில்க் ஸ்மிதாவோட கண்ணுக்கு அப்றோமா உன்னோட கண்ணு செம்ம போதையா இருக்கு..”
இருவரும் வாய் விட்டுச் சிரித்தோம். எனக்கு அவள் கன்னங்களை தொட வேண்டும் போல இருந்தது. கையில் மதுக் கோப்பையுடன் பெண்ணின் ‘வடிவை’ ரசிக்கும் அழகியலை குஷ்வந்த் சிங் தான் கற்றுக் கொடுத்தார் என செவ்வந்திக்கு நான் எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
“முதுகுல என்னாச்சு?
“ஒன்னும் இல்லையே..”
“அமல் சொன்னான்ல..”
“அவம் பேருதான் அமலா?.. இன்னொருத்தன் பேரு என்ன?”
“கார்த்தி.. நான் என்ன கேக்கற நீ என்ன சொல்லுற? சரி உனக்கு கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்.”
“அமலு எம் மாருல பாத்தத சொல்லலையா?”
செவ்வந்தி உதடுகள் வளைத்தாள். சிரித்தாள் என மனதுக்குப் படவில்லை. சிரிப்பது வேறு வளைப்பது வேறு. அந்த நொடிகளுக்கு வலி மிகவும் அடர்த்தி. “அது எப்பவோ நடந்தது. உங்கள மாதிரி அரவேக்காட்டு கேசுக வந்துட்டா உள்ள ‘அப்பாடான்னு..’ இருக்கும்.. போனமா தொல்லை இல்லாம வந்தோமான்னு வந்துடலாம். ம்ம்ஹூம்.. ஆம்பளைங்களும் பாவம்தா. கண்ணு பாக்கறக்கு காது கேக்கறக்குங்கிற மாதிரி எல்லாத்துக்கும் ஒரு தேவை இருக்குது. பொண்டாட்டிகூட மட்டும்தான் படுக்க முடியும்னா, வேற எவள நெனச்சாலும் ‘எந்திரிக்காத’ மாதிரி அப்பவே அந்த சாமி படைச்சிருக்கணுமில்ல? சோத்துக்கும், கௌரவத்துக்கும் ஒடம்ப பொத்தலாக்கிட்டு... ட்சை.. எத்தனை பொண்டாட்டிகளோட தாலி அந்துருக்கும் நாங்க இல்லீன்னா.. தெரியுமா? வீட்டுல காமத்துக்கு மாட்டும்தான் தீனி.. காம வெறிக்கு நாங்கதான். முதுகுல அறுக்குறது, சிகரெட் அணைக்கிறது, இதெல்லாம் காமவெறி.. ஆனா ஒட்டு மொத்த ஜனத்துக்கும் ஒடம்ப விக்கிற பொம்பளைன்னா எச்சி.. நீயும்தான என்ன எச்சின்னு நெனச்சுட்ட?”
“பாத்தியா இப்டி சொல்லிட்ட?”
“நா ஒன்னு சொல்லட்டா..? கிராமத்துல குடும்ப பொண்ணா வாழ்ந்துட்டு, திடீர்னு ஒரு நாள் எல்லாமே மாறி, அம்மணமா நிக்கிற நாலு ஆம்பளைங்க முன்னாடி துணிய அவுக்குறது எல்லாம் எவ்ளோ கொடுமையான விஷயம் தெரியுமா..?”
என் கண்களை விட்டு கண்ணீர் துளிகள் கொட்டி விடக் கூடாது என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். அவளிடம் முற்றிலும் பேச்சைத் தவிர்க்கவே நினைத்தேன்.
“நா இன்னொன்னு சொல்லட்டா..?”
நான் பதிலேதும் பேசாமல் அவளைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
“எம்பேரு ரம்யா இல்ல.. செவ்வந்தி.. வெளில நாங்க நெஜ பேர சொல்லிக்க மாட்டோம்.. என்னமோ உன்கிட்ட சொல்லணும்னு தோனுச்சு..”
என் பரந்த அமைதியான கிளைகளின் நிழலில் செவ்வந்தி இளைப்பாறல் கொள்வது போல் பட்டது. எனக்கும் அவளுக்கும் அரையடி தூரம் தான் ஆனாலும் என் தோள் மேல் அவள் தலை சாய்த்தது போல் பட்டது. நான் இன்னும் அமைதி காத்தேன். அவளிடம் பேச வேண்டும், பேச வேண்டாம் என்பதில் என்னிடம் எந்த முனைப்பும் இல்லை.
“ஓய்.. பிரான்சிஸு.. என்ன பேச்சையே காணோம்..?”
“பேரு அழகா இருக்கு. உம் மூஞ்சி மாதிரியே..”
“ரொம்ப தேங்க்ஸ் ப்பா.. என்ன எவன் காருல ஏத்திக்கிட்டாலும் கண்ணாடிய மட்டும் எறக்கி விடவே மாட்டானுக.. செரி நடிகர் நடிகை எல்லாம் காருல போறப்ப கண்ணாடிய எறக்கி விட்டுட்டா போறாங்க..? நம்மளும் அந்த மாதிரி தான்னு நெனச்சுக்குவேன். ஆனா எனக்கு இந்த மாதிரி வேடிக்கை பாத்துட்டு போறது ரொம்ப புடிக்கும்.”
காற்றில் அவள் முகம் சிறு பெண்ணின் பொழிவானது. மெட்ராஸ் நாட்களை மறந்து மீண்டும் பழனி அடிவாரத்தில் குதிரை வண்டிக்காரரின் மகள் ஆனாள். கதவின் மேல் தலை வைத்து இரவின் குளுரில் உறைந்தவள், கொடைக்கானல் காற்றை விட இந்த குளிர் கம்மி என்று சொல்லி பால்ய நாஸ்டால்ஜியாக்கள் பகிர்ந்தாள்.
கேளம்பாக்கத்தில் ‘நைட்டு கடை’ அன்று திறக்கவில்லை. செவ்வந்தி எனக்காக காரில் சிகரெட் தேடினாள். கொஞ்சம் தள்ளி படூரில் டீ கடை திறந்திருந்தது. “நான் வரட்டுமா இங்கயே காருலையே இருக்கட்டுமா?” எல்லாம் புரிந்தவள் போல் கேட்டாள். காரை விட்டு இறங்கியதும் அங்கிருந்த அத்தனை ஆண்களின் கண்களையும் இழுத்தாள். டீ கிளாஸின் அடியில் முந்தானையை வைத்துப் பிடித்து ஊதிக் குடித்தாள். நான்கு கேக்குகளை பார்சல் கட்டிக்கொண்டாள். அதில் மூன்று குழந்தைக்கும் ஒன்று தன் புருஷனுக்கும் என்றாள். நான் அவளை காரில் ஏற்றிய பின்பும் தாமதப் படுத்தினேன். எனக்கு செவ்வந்தியை விட மனதில்லை.
“என்ன ஆச்சு?அங்க தலகணிய வெச்சு அமுத்திட்டு இருந்த இப்ப கை வச்சு அழுத்திட்டே வர.. வயிறு வலிக்குதா?”
“அட ஏப்பா நீ வேற.. என் கஷ்டத்த சொன்னா நீ அழுதுறுவ..”
“எதுவா இருந்தாலும் பரவால்ல.. சொல்லு..”
“கர்ப்ப பையில கட்டி இருக்குன்னு சொல்லுறாங்க. ஆப்ரேஷன் பண்ணனும்.. ஒன்னுக்கு போனா கூட உயிர் போற மாதிரி வலிக்கிது.. நா என்ன பாக்குறதா எம் புருஷன பாக்குறதா இல்ல எம் புள்ளைகள பாக்குறதா...? முருகன் தான் வெளிச்சம்..”
நான் அந்த இடத்தில் என் மௌனத்தைக் கலைத்து, செவ்வந்தியின் கைகளை இறுகப் பற்றியிருக்க வேண்டும். கண்ணீரை விழுங்கத் தெரிந்த எனக்கு, அடி மடியில் கை வைத்து அழுத்தி உட்கார்ந்திருக்கும் அவளை ஆறத் தழுவ தெரிந்திருக்க வேண்டும்.
“எனக்கு இந்த தொழிலே புடிக்கலப்பா. நீ படம் எடுத்தா எனக்கு சான்ஸ் குடேன்..”
சோலிங்கநல்லூரில் அவளை இறக்கி விட்டபோது கடைசியாகப் பார்த்தது. நான் இன்னும் செவ்வந்தியை தேடிக்கொண்டு இருக்கிறேன்.
............
காமம் தணிந்த லாரி மீண்டும் சர்வீஸ் ரோட்டுக்கு ஏறியது. குமரப்பன் பீடியைப் பற்ற வைத்து கியரை மாற்றினார். கடுக்கான், ஆண் பருவத்தை அடைந்த மயக்கத்தில் மலர்ந்திருந்தான். ஆனால் குமரப்பனின் முகமோ மாறியிருந்தது. கடுக்கானை கௌரியோடு புணர ஒப்புதல் தந்ததின் குற்ற உணர்ச்சியால் குமரப்பன் கடு கடுவென இருக்கிறார் என நினைத்துக்கொண்டேன்.
“இந்த தெள்ளவாரித் தாயோலி செஞ்ச காரியத்த பாத்தியா பிரான்சிசு..?”
“என்ன ஆச்சு ண்ணா..?”
எனக்கு ஒன்றும் புரியாமல், கூகிள் மேப்பில் ஹம்பி-க்குப் போகும் வழியை பார்த்துக் கொண்டிருந்த நான் போனை அணைத்தேன்.
“அவளே ரண்டு உசுர காப்பாத்த அத்தன கஷ்ட பட்டுட்டு இருக்குறா.. வீட்ட விட்டு போயி மூனு நாளாச்சாமா.. எவனோ லாரிக்காரன் கூட்டிட்டு போனவன் காசும் தராம ஒன்னும் தராம, அடிச்சு, அந்த காட்டுக்குள்ள எறக்கி விட்டுட்டு ஓடிட்டான். இப்ப இந்தக் கண்டாரொளி பையன் என்னடான்னா, பண்றத எல்லாம் பண்ணிட்டு அவ கையில அந்த கிழிஞ்ச நோட்ட சொருவிட்டு வந்துருக்கான்.. பாவம் புடிச்சுக்கும்டா கடுக்கா..”
“ரண்டு உசுரா? கெளரிக்கு இன்னொரு கொழந்த இருக்குதா..?”
“புள்ளை ஒரே புள்ள தான். உள்ள அவ புருஷன் கெடையா கெடக்குறான் பிரான்சிசு.. எதோ சாதி பிரச்சனையில பாவம், அவ புருசனோட ரண்டு குதிகால் நரம்பையும் வெட்டி எறிஞ்சுட்டானுக..”
...காமம் காமமென்ப...
(சிறுகதை )
Comments
Post a Comment